ப்ரேமிக பால லீலா விஹார்
இயற்கை எழில்கொஞ்சும் சேங்கனூர் புண்யக்ஷேத்திரத்தில் அமைந்துள்ள ‘ப்ரேமிக பால லீலா விஹார்’ நம் சத்குருநாதர் ஸ்ரீ ஸ்ரீ அண்ணாவுடைய பால லீலைகளைத் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தும் ஒரு தெய்வீக அருங்காட்சியகமாகும். ஸ்ரீ ஸ்ரீ அண்ணா அவர்களுடைய அவதார ஸ்தலமான சேங்கனூர் கிராமத்திலேயே அமைந்துள்ள இந்தப் புனித மையம், திக்கெட்டிலிருந்து நாடிவரும் பக்தர்களின் ஆன்மவேட்கையை தீர்க்கும் அருட்சுனையாகத் திகழ்கின்றது.
கிருஷ்ண ஜன்மாஷ்டமி புண்யதினத்தில் இதே ஊரில் அவதரித்த சத்குருநாதர் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகள் (ஸ்ரீ ஸ்ரீ அண்ணா என்று ப்ரேமையுடன் பக்தர்களால் அழைக்கப்படும் நம் சத் குருநாதர்) தனது வாழ்நாளின் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் பாகவத தர்மத்திற்காக அர்ப்பணித்தவர். பால பருவத்திலேயே அவரிடம் இயல்பாகவே காணப்பட்ட ஒப்பற்ற பக்தியும் ஆழ்ந்த கிருஷ்ண ப்ரேமையும் காந்தம் இரும்பை ஈர்ப்பதுபோல் எல்லோரையும் அவரிடம் ஈர்த்தது.
ஸ்ரீமத் பாகவதத்திற்கு அறிமுகமில்லாத பால பருவத்திலேயே தாமாகவே ஸ்ரீமத் பாகவத ஸ்லோகங்கள் அவரிடமிருந்து வெள்ளப்பெருக்குபோல் வெளிவந்தன.
ஸ்ரீ ஸ்ரீ அண்ணா அவர்களுடைய உபதேசங்கள் அனைத்துமே கிருஷ்ண ப்ரேமை, பாகவத தர்மம், மற்றும் தளராத ஆன்மீக தேடல் ஆகியவற்றை ஒட்டியே அமைந்துள்ளன.
தனது உபன்யாசங்கள் மற்றும் எழுத்தின் வாயிலாக ஸ்ரீ ஸ்ரீ அண்ணா, பல்வேறு மதங்கள் மற்றும் சித்தாந்தங்களின் நோக்கமும் ஒன்றுதான் என்பதையும், தன்னலமற்ற தூய அன்புதான் அந்த நோக்கம் என்பதையும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்கள்.
அவர் கையாளாத ஸம்ப்ரதாயங்களே இல்லை என்று சொன்னால் மிகையாகாது.
ஸ்ரீ ஸ்ரீ அண்ணா அவர்கள் காட்டக்கூடிய இந்த உயரிய வழியும், அவரது திவ்ய சரித்திரமும் இந்த வையகத்திற்கே கிடைத்துள்ள அறிய பொக்கிஷம் என்பதை மனதில்கொண்டு ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி சேங்கனூர் புண்ய பூமியில் ப்ரேமிக பால லீலா விஹாரை நிறுவியுள்ளார்கள்.
இந்தப் புண்யதளமானது ஸ்ரீ ஸ்ரீ அண்ணா அவர்களின் பால லீலைகள் மற்றும் உபன்யாசங்களை, மிகவும் அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளது. கலைநயத்தோடு அமைக்கப்பட்டுள்ள இந்த மையம், காணவரும் அடியவர்கள் ஒவ்வொருவருக்கும் அந்தந்த பால லீலைகளை நேரில் தரிசித்த அனுபவத்தையும் அனுகிரஹத்தையும் வாரி வழங்குகிறது.
இந்த அருங்காட்சியகத்தைத் தரிசிக்கும் அனைத்து அடியவர்களுக்கு ஸ்ரீ ஸ்ரீ அண்ணாவின் திவ்ய சரித்திரத்துடன் தானும் இணைந்து பயணிப்பதுபோல் ஒரு ஆச்சர்யமான அனுபவத்தைக் கொடுக்கும்.
சுருங்கச்சொன்னால் பக்தி, எளிமை, கிருஷ்ண ப்ரேமை – இவையே இந்த மார்க்கத்தின் சாரம்.
‘ஸ்மரணே சுகம்’ என்ற நம் சத்குருநாதரின் பொன்னான வாக்கிற்கு ஏற்ப, குருநாதரின் ஸ்மரணையில் இந்த பால லீலா விஹார் நம்மை ஆழ்த்திவிடுகின்றது.
உலக விஷயங்களைக் கடந்து, நம் உள் உறையும் இறையுணர்வுடன் கலந்துவிடும் ஆனந்த அனுபவம் அது.
குருநாதரின் லீலைகளை ஸ்மரிக்கும் பொழுது நம்மையும் அறியாமல் அவர்பால் நாம் கொண்டுள்ள ப்ரேமை பன்மடங்காகிவிடுகின்றது. கல் நெஞ்சு நன்றியுணர்வுடன் கரைந்து விடுகின்றது. ஒவ்வொரு நொடிப்பொழுதும் வழிகாட்டி ஞானத்தை நல்கிய குருநாதரின் கிருபையை ஸ்மரிக்கசெய்கின்றது.
உலகெங்குமுள்ள அடியார்களை ப்ரேமிக பால லீலா விஹாருக்கு வரவேற்கின்றோம். குருநாதருடன் நமக்கு உள்ள அந்த திவ்யமான தொடர்பை நேரில் வந்து அனுபவிக்க வேண்டுமாறு பிரார்த்திக்கின்றோம்.
-
July 22, 2023, 9:49 am
Jai Jai Gurunath