To Namadwaars Across India
ஸ்ரீ ஹரி
மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் பரிபூரண அருளாசியுடன் இந்த வருடம் ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி உத்ஸவம் எல்லா நாமத்வாரிலும், GOD ஸத்சங்கங்களிலும் அழகாகவும் கோலாஹலமாகவும் கொண்டாடப்பட உள்ளது. அனைவரையும் அழகாக ஒருங்கிணைத்து, உத்ஸவத்தினை கோலாஹலமாக கொண்டாடி, குருவருளுக்கும், ப்ரேமிகவரதன் அருளுக்கும் பாத்திரமாவோமாக.
கோகுலாஷ்டமி கொண்டாடப்பட வேண்டிய வழிமுறைகள்
- செப்டெம்பர் 3ஆம் தேதி அன்று நாமத்வார் அல்லது நாமம் நடக்கும் இடத்தினை நன்றாக நீரினால் தூய்மை செய்துவிட்டு, மாக்கோலம் போட்டு, கிருஷ்ணரின் காலடிகளை வரைந்து, வாழை மரம், மாவிலை தோரணங்கள் கட்டி நன்றாக அலங்காரம் செய்ய வேண்டும்.
- அன்று இரவு பனிரெண்டு மணிக்குள் (உற்சவ மூர்த்தி இருப்பவர்கள் மட்டும்) உற்சவ மூர்த்திக்கு அபிஷேக, அலங்காரம் செய்யவேண்டும். அபிஷேக நேரத்தின் பொழுது ஸ்ரீமத் பாகவத தசமஸ்கந்தம் முதல் மூன்று அத்தியாயத்தினை ( ஸ்ரீ கிருஷ்ணர் அவதார கட்டம்) பாராயணம் செய்தல் வேண்டும். தமிழ் பாகவத புஸ்தகத்தினையும் உபயோகிக்கலாம். அவல், பொறி, வெண்ணெய், தயிர், சீடை, முறுக்கு, அப்பம், வெள்ளரி, நாவல் பழம் இவைகளை நைவேத்யம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். பாராயண முடிவில் அன்பர்கள் அனைவருக்கும் சிறிது நெல் உடன் ஒரு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய் நாணயத்தினை சேர்த்து விநியோகம் செய்தல் வேண்டும். இதற்கு பீஜ தானம் என்று பெயர்.
- இரவு குழந்தைக் கிருஷ்ணனை தொட்டிலில் இட்டு, பக்தர்கள் அனைவரும் தொட்டிலை சுற்றி வந்து “ஜெய் ஜெய் கோவிந்த ஜெய் ஹரி கோவிந்த” என்ற நாமகோஷத்துடன் கிருஷ்ண ஜனனத்தினை கொண்டாட வேண்டும். பின்னர் பக்தர்கள் ஒருவர் மேல் ஒருவர் வெண்ணெய், பால், தயிர் போன்றவற்றை தெளித்துத்கொண்டு நந்தோஸ்தவத்தினை கொண்டாடலாம்.
- விருப்ப முள்ளவர்கள் அடுத்த நாள் முதல், பாகவத சப்தாஹ பாராயணம் செய்ய முடியும் என்றால் அதனை ஆரம்பிக்கலாம்.
- தங்களது நாமத்வாரில் ஸ்ரீமத் பாகவத பாராயணம் செய்வோர் இருப்பின் அவர்களைக் கொண்டு காலையில் பாராயணமும், மாலையில் கதா ஸ்ரவணமும் செய்யலாம். அப்படி இல்லை என்றால் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்களின் “ப்ருந்தாவனமும் நந்தகுமாரனும்” CDக்களை நாமத்வாரில் உள்ள அனைவரும் கேட்கும் வண்ணம் ஒளிபரப்பி கதா ஸ்ரவணம் செய்யலாம்.
- முடிந்தவர்கள் 7ஆம் தேதி, த்வாதசியன்று கோவிந்த பட்டாபிஷேகம் அன்று காலை கிருஷ்ணனுக்கு திருமஞ்சனம் செய்து, நிறைய பூக்களை கொண்டு “கோவிந்த கோவிந்த கோவிந்த” என்ற நாமகோஷத்துடன் ராதா கிருஷ்ணரின் சிரஸில் அர்ப்பணித்து, சர்க்கரை பொங்கல், தேங்காய் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், வடை மற்றும் தயிர் சாதம் நைவேத்யம் செய்து அனைவருக்கும் விநியோகம் செய்யலாம்.
- விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 11, 12 ஆம் தேதி உள்ளூரில் உள்ள பாகவதர்களைக் கொண்டு ராதா கல்யாண உற்சவம் செய்விக்கலாம்.
குறிப்பு :
- கோகுலாஷ்டமி கொண்டாட்டங்களை ஒரு சில Bannerகளை தங்கள் பகுதிகளில் வைத்து ஆடம்பரம் இல்லாமல் அனைவரும் அறியும் வண்ணம் விளம்பரப் படுத்தலாம்.
- உற்சவத்தின் முதல் நாள் தவிர மற்ற நாட்களில் எவரும் நாமத்வாரில் இரவில் தங்க கண்டிப்பாக அனுமதி இல்லை
- ஆண்கள், பெண்கள் கலந்து பழகுதல் கூடாது. தனி தனி வரிசைகளில் அமர்தல் வேண்டும்.